About
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டத்தைச் சேர்ந்த ஆட்டுவம்பட்டி மலை கிராமத்தில் முதன் முதலாக பெண்களுக்காக நிறுவப்பட்டதுதான் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கொடைக்கானல். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், குளுமையான தட்பவெப்பத்துடன் அமைந்துள்ளது கொடைக்கானல் நகரம். பொதுவாக இந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்கூட்டங்களை பழனிமலைகள் என்று அழைப்பார்கள். இயற்கை எழில்கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால், தமிழ்மொழியில் “காடுகளின் கொடை” என்றும், “மலைகளின் இளவரசி” என்றும் கொடைக்கானல் நகரத்தை அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். இத்தகைய சிறப்புடன் திகழும் கொடைக்கானல் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா முன்னிலையில் அரசு ஆணை எண் 15 ன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் 1984 ஆம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தால் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு “அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, கொடைக்கானல்” என்று அழைக்கப்பட்டு பெண்கள் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. பல்கலைக்கழக மானிய குழுவின் நிலை எண் 12b மற்றும் 2f படி, இப்பல்கலைக் கழக கல்லூரி அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாணவிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தி இயங்கி வருகிறது.
2018-2019 கல்வியாண்டில், அரசு ஆணை எண் 36, உயர்கல்வித்துறை (ஜி1), நாள் 28-02-2019 ன்படி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியாக இயங்கிவந்த நம் கல்லூரி, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கொடைக்கானல் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் இப்பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை இளங்கலை மாணவிகள் தங்களது முதுகலை படிப்பினை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.